துறை அலகுகள்

ஈரோடு, தருமபுரி, வேலூர், திருச்சி மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அமைந்துள்ள ஐந்து மண்டல அலுவலகங்கள் மூலமாக பட்டு வளர்ச்சி செயல்பாடுகள் கண்காணிக்கப்படுகின்றன. மாநிலத்தில் உள்ள 19 உதவி இயக்குநர்களால் மல்பெரி விரிவாக்கம் மற்றும் அதனைச் சார்ந்த பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. பட்டு விதை ஒருங்கிணைப்புப் பணியினை, ஓசூரிலுள்ள துணை இயக்குநர் அலுவலகம், 5 உதவி இயக்குநர்களின் ஒத்துழைப்புடன் மேற்கொள்கிறது. மாநிலத்தில் உற்பத்தி செய்யப்படும் கச்சாப்பட்டினை வர்த்தகம் செய்யும் பணியை, காஞ்சிபுரத்தில் உள்ள அரசு அண்ணா பட்டு பரிமாற்றகம் மற்றும் அதன் சேலம் கிளை மேற்கொள்கிறது. மாநில அளவிலான பயிற்சி நிலையம் ஒன்று, துணை இயக்குநர் தலைமையில் ஓசூரில் இயங்கி வருகிறது. இப்பயிற்சி நிலையம், பட்டு உற்பத்தியாளர்கள் மற்றும் துறை அலுவலர்களுக்கு பல்வேறு திட்டங்களின் கீழ் பயிற்சியினை வழங்கி வருகிறது.


ஆதார பட்டுப்புழு விதை உற்பத்தி அலகுகள்

பட்டுவளர்ச்சித் துறையில் உள்ள ஆதார விதைப் பண்ணைகளில் உற்பத்தி செய்யப்படும் ஆதார விதைக்கூடுகளை பயன்படுத்தி, வர்த்தக ரீதியிலான முட்டைத் தொகுதிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகின்றன. மூன்றடுக்கு முறையில் பட்டுப்புழுக்களின் இனப் பண்புகளை பராமரித்து, பட்டு விவசாயிகளுக்கு தேவையான வர்த்தக ரீதியிலான பட்டுப்புழு முட்டைகளை உற்பத்தி செய்வதற்கான ஆதார விதைக்கூடுகளை உற்பத்தி செய்து வழங்க, 19 விதைப் பண்ணைகள் இத்துறையில் உள்ளன.

விதைப் பண்ணைகள்
மாவட்டம்உதவி இயக்குனர்வ எண்விதை பண்ணை பெயர்
கிருஷ்ணகிரி அவலப்பள்ளி 1 பேரிகை
2 அவலப்பள்ளி
3 ஓசூர்
கல்கொண்டப்பள்ளி 4 கல்கொண்டப்பள்ளி
5 தளி
உத்தனப்பள்ளி 6 உத்தனப்பள்ளி
7 உலிமங்கலம்
8 மேலகிரி
கொலட்டி 9 கொலட்டி
சேலம் சேலம் 10 ஏற்காடு
ஈரோடு தாளவாடி 11 ஹாசனூர்
மாதஹள்ளி 12 மாதஹள்ளி
திருப்பத்தூர் திருவண்ணாமலை 13 அதனவூர்
நாமக்கல் நாமக்கல் 14 கொல்லி மலை
தேனி தேனி 15 மயிலாடும்பாறை
தென்காசி தென்காசி 16 செங்கோட்டை
நீலகிரி குன்னூர் 17 குன்னூர்
18 மசினகுடி
19 மாசக்கல்

வித்தகங்கள்

வித்தகங்கள் என்றழைக்கப்படும் பட்டுப்புழு விதை உற்பத்தி மையங்கள், பட்டுத் தொழிலின் வளர்ச்சிக்கு ஒரு முக்கிய பங்கினை ஆற்றுகின்றன. பின்வரும் 11 மாநில அரசு வித்தகங்கள் மற்றும் 2 மத்திய பட்டு வாரியத்தால் இயக்கப்படும் தேசிய பட்டுப்புழு விதைக் கழகத்தின் (NSSO) வித்தகங்கள் மூலம் நோயற்ற பட்டு முட்டைகள் தயாரிக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.

மாவட்டம்உதவி இயக்குனர்வ எண்வித்தக பெயர்
கிருஷ்ணகிரி ஓசூர் (Grainage) 1 ஓசூர் CB
ஓசூர் CSR
கிருஷ்ணகிரி (Grainage) 2 கிருஷ்ணகிரி
தர்மபுரி தர்மபுரி 3 சோகத்தூர்
பென்னாகரம் 4 பென்னாகரம்
கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 5 கோயம்புத்தூர்
ஈரோடு ஈரோடு 6 ஈரோடு
தாளவாடி 7 தாளவாடி
திருப்பத்தூர் வாணியம்பாடி 8 வாணியம்பாடி
திருச்சி திருச்சி 9 திருச்சி
திண்டுக்கல் திண்டுக்கல் 10 திண்டுக்கல்
தென்காசி தென்காசி 11 குற்றாலம்


பல்நிலை குளிர்பதன அலகுகள்

ஓர் ஆண்டில் ஒரு தலைமுறை, இரண்டு தலைமுறை மற்றும் பல தலைமுறைகளை உருவாக்கும் பட்டுப்பூச்சிகள் முறையே ஒரு சுழற்சி இனம், இரு சுழற்சி இனம் மற்றும் பல சுழற்சி இனம் என வகைப்படுத்தப்பட்டுள்ளன. சாதாரணமாக, பல சுழற்சி இனங்களில் பட்டு முட்டைகள் முட்டையிடப்பட்ட 10-11 நாட்களிலும், இரு சுழற்சி இனங்கள் மற்றும் ஒரு சுழற்சி இனங்களில் 6-10 மாதங்களிலும் பொரிக்கின்றன. தமிழ்நாட்டில் உள்ள பட்டு விவசாயிகளால் வெண் பட்டுப்புழு வளர்ப்பு அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. தமிழ்நாட்டில் 90 சதவிதத்திற்கும் அதிகமான விவசாயிகள் இருசுழற்சியின பட்டு முட்டைகளையே வளர்த்து வருகின்றனர். இருசுழற்சியின பட்டுப்பூச்சி ஓர் ஆண்டில் இரு தலைமுறைகளை உருவாக்குகிறது. பட்டு முட்டைகளின் விதை உறக்கத்தினைப் போக்கி அவற்றை நான்கு, ஆறு மற்றும் பத்து மாதங்களுக்குப் பின் பொரிக்கும் வகையில் விவசாயிகளுக்கு விநியோகம் செய்வதற்காக இருசுழற்சியின பட்டு முட்டைகள் 2.5oC முதல் 25oC வரையிலான பல்வேறு வெப்ப நிலைகளில் சுமார் 120 முதல் 300 நாட்கள் என முன்னதாக நிர்ணயம் செய்யப்பட்ட காலத்திற்கு பாதுகாப்பாக குளிர்பதன அலகில் பதனம் செய்யப்படுகின்றன. விவசாயிகள் வெற்றிகரமாக பட்டுக்கூடு அறுவடை பெற, பட்டு முட்டைகளைப் பதனப்படுத்திட அதிக பட்ச கவனம் செலுத்துவது மிகவும் அவசியமானதாகும். இருசுழற்சியின பட்டு முட்டைகளை ஆண்டு முழுவதும் பதனப்படுத்தி விநியோகம் செய்வதற்காக மூன்று பல்நிலை குளிர்பதன அலகுகள் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரியிலும் ஓசூரிலும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள சின்னவேடன்பட்டியிலும் செயல்படுகின்றன. 2019-2020-ஆம் ஆண்டில் இவ்விரண்டு பல்நிலை குளிர்பதன அலகுகளில் 36.57 இலட்சம் இருசுழற்சியின பட்டு முட்டைகள் பதனப்படுத்தப்பட்டன.

கோயம்புத்தூர், ஈரோடு, தாளவாடி, ஓசூர், கிருஷ்ணகிரி, பென்னாகரம், தருமபுரி மற்றும் வாணியம்பாடி ஆகிய பட்டு முட்டை வித்தகங்களில் உற்பத்தி செய்யப்படும் இருசுழற்சியின பட்டு முட்டைகள் பல்நிலை குளிர்பதன நிலையங்களில் நான்கு, ஆறு, பத்து மாத பதன அட்டவணைப்படி மிகுந்த கவனத்துடனும், பாதுகாப்புடனும் பதனப்படுத்தப்பட்டு, பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகின்றன.


தொழில்நுட்ப சேவை மையங்கள்

பட்டு விவசாயிகளுக்கு மல்பெரி சாகுபடி, மல்பெரித் தோட்டப் பராமரிப்பு, பட்டுப்புழு வளர்ப்பு மற்றும் பயிர்ப் பாதுகாப்பு முறைகள் குறித்த தொழில்நுட்ப உதவிகளை அவர்களது இல்லம் தேடிச் சென்று வழங்குவதற்காக, மாநிலத்தில் 105 தொழில் நுட்ப சேவை மையங்கள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு தொழில் நுட்ப சேவை மையத்திலும் ஓர் உதவி ஆய்வாளர் / ஆய்வாளர் தலைமையில் 5-6 இளநிலை ஆய்வாளர்கள் பட்டு விவசாயிகளது தேவைகளை கவனித்து வருகின்றனர்.


மண்டலம்மாவட்டம் வ எண்உதவி இயக்குனர்No of TSC
தருமபுரி கிருஷ்ணகிரி 1 ஓசூர் 7
2 தேன்கனிக்கோட்டை 6
3 கிருஷ்ணகிரி 4
தருமபுரி 4 தருமபுரி 4
5 பென்னாகரம் 6
Erode சேலம் 6 சேலம் 7
கோயம்புத்தூர் 7 கோயம்புத்தூர் 4
திருப்பூர் 8 உடுமலைப்பேட்டை 5
ஈரோடு 9 ஈரோடு 7
10 தாளவாடி 3
நீலகிரி 11 குன்னூர் 1
வேலூர் வேலூர் 12 வாணியம்பாடி 8
திருப்பத்தூர்
ராணிப்பேட்டை
திருவள்ளூர்
காஞ்சிபுரம்
செங்கல்பட்டு
திருவண்ணாமலை 13 திருவண்ணாமலை 6
திருப்பத்தூர்
விழுப்புரம் 14 விழுப்புரம் 4
கல்லக்குறிச்சி
கடலூர்
திருச்சி திருச்சி 15 திருச்சி 8
புதுக்கோட்டை
அரியலூர்
திருவாரூர்
தஞ்சாவூர்
பெரம்பலூர்
நாகப்பட்டினம்
நாமக்கல் 16 நாமக்கல் 7
கரூர்
மதுரை திண்டுக்கல் 17 திண்டுக்கல் 6
சிவகங்கை
தேனி 18 தேனி 5
மதுரை
ராமநாதபுரம்
தென்காசி 19 தென்காசி 7
திருநெல்வேலி
விருதுநகர்
தூத்துக்குடி
கன்னியாகுமரி
மொத்தம் 105


அரசு பட்டுப் பண்ணைகள்

பட்டுவளர்ச்சித் துறையின் கீழ் 32 அரசு பட்டுப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. அவை, 6 செயல்விளக்கம் மற்றும் பயிற்சி மையங்கள், 7 அரசு கலப்பின பட்டுப் பண்ணைகள், 5 மாதிரி மல்பெரி பட்டுப் பண்ணைகள், 10 விவசாயிகள் பயிற்சி மையங்கள் மற்றும் 4 இளம்புழுவளர்ப்பு மையங்கள் ஆகும். இவை செயல்விளக்கம் மற்றும் பயிற்சி மையங்களாக செயல்பட்டு வருவதுடன் தரமான மல்பெரி நாற்றுகள் மற்றும் ஆரோக்கியமான இளம்புழுக்களை தேவைப்படும் பட்டு விவசாயிகளுக்கு வழங்கி வருகின்றன.


இளம்புழு வளர்ப்பு மையங்கள்

பட்டு முட்டை பொரித்து, இரண்டாம் தோலுரிப்பு வரையிலான 7 நாட்கள் புழுவளர்ப்பு, ‘இளம்புழு வளர்ப்பு‘ என்றழைக்கப்படுகிறது. இளம்புழு வளர்ப்பு செய்து அவற்றை விவசாயிகளுக்கு வழங்கும் மையங்கள் ‘இளம்புழு வளர்ப்பு மையங்கள்’ என்று அழைக்கப்படுகின்றன. சுகாதாரம் பேணுவதிலும், தேவையான தட்ப-வெப்ப நிலைகளைப் பராமரிப்பதிலும் மற்றும் தரமான மல்பெரி இலைகளை உணவாக அளிப்பதிலும் இளம்புழு வளர்ப்பிற்கு சிறப்பான கவனிப்பு தேவைப்படுகிறது. பிரத்யேக உரப் பரிந்துரை மற்றும் கவாத்து அட்டவணை அடிப்படையில் மல்பெரித் தோட்டம் மற்றும் தனி புழுவளர்ப்பு மனை பராமரிக்கப்பட்டு, புழுவளர்ப்பு காலத்தில் இளம்புழு வளர்ப்பு மையங்களில் அதீத கவனம் செலுத்தப்படுகிறது. மாநிலத்தில் வெற்றிகரமான இருசுழற்சியின பட்டு வளர்ப்பிற்கு முக்கிய காரணியாக இளம்புழு வளர்ப்புக் கொள்கை திகழ்கிறது.

இளம்புழு வளர்ப்பு மையங்களிலிருந்து இளம்புழுக்களை பெற்று வளர்ப்பதால், பட்டு விவசாயிகளுக்கு புழுவளர்ப்பு காலத்தில் 7 நாட்கள் சேமிக்கப்பட உதவுவதுடன், பட்டுக்கூடு உற்பத்தி மற்றும் வருமானம் அதிகரிக்கப்படுகிறது. பட்டு விவசாயிகளுக்கு தேவைப்படும் தரமான இளம்புழுக்களை விநியோகம் செய்திட பிரத்யேகமாக நான்கு அரசு பட்டுப் பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இது தவிர 142 தனியார் இளம்புழு வளர்ப்பு மையங்களும் மாநிலத்தில் செயல்பட்டு வருகின்றன.


அரசு விதைக்கூடு அங்காடிகள்

விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் விதைக் கூடுகள் அரசு விதைக்கூடு அங்காடிகளில் வர்த்தகம் செய்யப்பட்டு தரமான விதை உற்பத்திக்காக வித்தகங்களுக்கு வழங்கப்படுகிறது. விதைக்கூடுகள் விற்பனைக்கென மூன்று விதைக்கூடு அங்காடிகள் ஒசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் கோயம்புத்தூரில் செயல்பட்டு வருகின்றன. பட்டுக்கூடுகளின் விற்பனை மதிப்பில் 0.75 சதவீதம் சேவைக் கட்டணமாக விற்போர் மற்றும் வாங்குவோரிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது.


அரசு பட்டுக்கூடு அங்காடிகள்

விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்ட பட்டுக் கூடுகளை வர்த்தகம் செய்ய ஏதுவாக துறையின் சார்பில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் 20 பட்டுக்கூடு அங்காடிகள் அமைக்கப்பட்டுள்ளன. பட்டுக்கூடு வாங்குவோர் (நூற்பாளர்கள்) மற்றும் பட்டுக்கூடு விற்போர் (விவசாயிகள்) அடங்கிய ஒரு குழு பட்டுக்கூடுகளுக்கான நியாயமான விலையினை தினசரி நிர்ணயம் செய்ய உதவுகிறது. வெளிப்படையான பட்டுக்கூடு ஏல நடவடிக்கைகளில் பட்டு நூற்பாளர்கள் பங்கேற்று பட்டுக்கூடுகள் கொள்முதல் செய்யப்பட அங்காடிப் பணியாளர்கள் உதவுகின்றனர்.


மாவட்டம்உதவி இயக்குனர்வ எண்பட்டுக்கூடு அங்காடி
கிருஷ்ணகிரி ஓசூர் 1 ஓசூர்
கிருஷ்ணகிரி 2 கிருஷ்ணகிரி
தருமபுரி பென்னாகரம் 3 பென்னாகரம், பாலக்கோடு
தருமபுரி 4 தருமபுரி
சேலம் சேலம் 5 சேலம்
கோயம்புத்தூர் கோயம்புத்தூர் 6 கோயம்புத்தூர்
ஈரோடு தாளவாடி 7 தாளவாடி
ஈரோடு 8 ஈரோடு
திருப்பூர் உடுமலைப்பேட்டை 9 உடுமலைப்பேட்டை
திருப்பத்தூர் வாணியம்பாடி 10 வாணியம்பாடி
திருவண்ணாமலை திருவண்ணாமலை 11 திருவண்ணாமலை
திருச்சி திருச்சி 12 திருச்சி
புதுக்கோட்டை 13 புதுக்கோட்டை
திண்டுக்கல் திண்டுக்கல் 14 திண்டுக்கல்
15 பழனி - C.K.புதூர்
சிவகங்கை 16 சிவகங்கை
தேனி தேனி 17 தேனி
தென்காசி தென்காசி 18 நன்னகரம்
விருதுநகர் 19 ஸ்ரீவில்லிபுத்தூர்
கன்னியாகுமரி 20 நாகர்கோவில்

பட்டுக்கூடுகளின் விற்பனை மதிப்பில் 0.75 சதவீதம் சேவைக் கட்டணமாக விற்போர் மற்றும் வாங்குவோரிடம் இருந்து வசூலிக்கப்படுகிறது. இந்த 20 பட்டுக்கூடு அங்காடிகளில் புதுக்கோட்டை, சிவகங்கை மற்றும் நாகர்கோவில் ஆகிய மூன்று அரசு பட்டுக்கூடு அங்காடிகள், பட்டு நூற்பு அலகுகளுடன் செயல்பட்டு வருகிறது. இப்பட்டுக்கூடு அங்காடிகளில் தனியார் பட்டு நூற்பாளர்களின் பங்கேற்பு இல்லாத நாட்களில், பட்டு விவசாயிகளின் நன்மையை கருத்தில் கொண்டு, அரசு பட்டு நூற்பகங்களுக்கு பட்டுக்கூடுகள் கொள்முதல் செய்யப்படுகிறது.



அரசு பட்டு நூற்பு / முறுக்கேற்றும் அலகுகள்

பட்டுத் தொழிலின் முக்கிய பிரிவான பட்டுக் கூடுகளுக்கு பிந்தைய பிரிவிற்கு துணை புரிவதற்காக, எட்டு அரசு பலமுனை பட்டு நூற்பு அலகுகள் பட்டு நூற்புத் தொழில் முனைவோருக்கான மாதிரி அலகுகளாக செயல்பட்டு வருகின்றன. அரசு பட்டு நூற்பகங்கள் பட்டுக்கூடு அங்காடி ஏலத்தில் பங்கேற்று பட்டு விவசாயிகளது உற்பத்திப் பொருளான பட்டுக்கூடுகளுக்கு நியாயமான விலை கிடைக்க உதவுகின்றன. இந்த அரசு பட்டு நூற்பு அலகுகள் ஆண்டொன்றிற்கு 24 மெட்ரிக் டன் கச்சாப் பட்டு நூலை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை ஆகும்.


அரசு அண்ணா பட்டுப் பரிமாற்றகம், காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள அரசு அண்ணா பட்டுப் பரிமாற்றகத்தில், மாநிலத்தில் உள்ள பட்டு நூற்பாளர்களால் உற்பத்தி செய்யப்படும் கச்சாப்பட்டுநூல் வர்த்தகம் செய்யப்படுகிறது. இப்பட்டுப் பரிமாற்றகம் 1991 ஆம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. பட்டு பரிமாற்றகத்திற்கு விற்பனைக்காக எடுத்து வரப்படும் பட்டுநூல் காஞ்சிபுரம், மண்டல பட்டு தொழில்நுட்ப ஆராய்ச்சி நிலையத்தால் பரிசோதனை செய்யப்படுகிறது. சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரத்திலுள்ள பட்டு நூற்பாளர்கள் மற்றும் முறுக்கேற்றுவோரின் வசதிக்காக அரசு அண்ணா பட்டுப் பரிமாற்றகத்தின் கிளை சேலத்தில் ஆகஸ்ட் 2018 முதல் செயல்பட்டுவருகிறது. இங்கு விற்பனைக்காக எடுத்துவரப்படும் பட்டுநூல் சேலம், பட்டு பரிசோதனை சேவை மையத்தில் பரிசோதனை செய்யப்படுகிறது.

பட்டின் தரம் மற்றும் கச்சாப்பட்டு நூலுக்கு நிலவும் சந்தை விலைக்கேற்ப அடிப்படை விலை நிர்ணயம் செய்யப்பட்டு கச்சாப்பட்டுநூல் ஏலம் விடப்படுகிறது. பெருநெசவாளர்கள், முறுக்காளர்கள் மற்றும் ‘டான்சில்க்’ போன்றோர் வெளிப்படையான ஏலத்தில் பங்கேற்று பட்டுநூலினை கொள்முதல் செய்கின்றனர். பட்டுநூலுக்கான விற்பனைத் தொகை பட்டு நூற்பாளர்களுக்கு உடனடியாக மின்னணு தீர்வுச் சேவை மூலம் வழங்கப்படுகிறது.


தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர் இணையம் (டான்சில்க்), காஞ்சிபுரம்

தமிழ்நாடு கூட்டுறவு பட்டு உற்பத்தியாளர் இணையம் (டான்சில்க்), தமிழ்நாட்டிலுள்ள பட்டு கூட்டுறவுச் சங்கங்களின் தலைமைக் கூட்டுறவு இணையமாக, 1978-ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டு காஞ்சிபுரத்தில் இயங்கி வருகிறது. இதன் கிளைகள் ஆரணி, கோயம்புத்தூர், ஈரோடு, காஞ்சிபுரம், கும்பகோணம் மற்றும் சேலம் ஆகிய ஆறு இடங்களில் அமைந்துள்ளன. பட்டு நூற்பாளர்கள், முறுக்காளர்கள் மற்றும் பட்டு நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள் இதன் உறுப்பினர்களாக உள்ளனர். அரசு அண்ணா பட்டு பரிமாற்றகத்திலிருந்து இணையம் பெருமளவு பட்டினை கொள்முதல் செய்து, தனது உறுப்பினர்களுக்கு விநியோகித்து வருகிறது.

பட்டு நெசவாளர் கூட்டுறவுச் சங்கங்கள், கதர் மற்றும் கிராமத் தொழில் வாரியம் மற்றும் சர்வோதய சங்கங்கள் போன்ற சான்றளிக்கப்பட்ட நிறுவனங்கள் ‘டான்சில்க்’ இணையத்திலிருந்து முறுக்கேற்றிய பட்டினை கொள்முதல் செய்கின்றன. முறுக்கேற்றிய பட்டு நூல் நெசவு செய்யப்பட்டு சேலை, வேட்டி மற்றும் இதர பட்டுப் பொருட்களாக தமிழ்நாடு கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச்சங்கம் (கோ-ஆப்டெக்ஸ்), கைத்தறி நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களின் விற்பனையகங்கள் மற்றும் தனியார் விற்பனை அங்காடிகள் மூலம் விற்பனை செய்யப்படுகின்றன.