பட்டு வளர்ச்சித்துறை
பட்டு வளர்ப்பு என்பது அறிவியல் பூர்வமாக பட்டு நூல் உற்பத்தி செய்யும் கலை ஆகும். இது ஒரு விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட, ஊரகப் பகுதிகளிலுள்ள மக்கள் குறிப்பாக பெண்களுக்கு வேலை வாய்ப்பினையும், வருமானத்தையும் சீரான இடைவெளிகளில் பெற்றுத்தரக்கூடிய ஒரு குடிசைத் தொழிலாகும்.
பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபடும் விவசாயிகள் 25–27 நாட்களுக்குள் பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்து அதனை விற்பனை செய்வதன் மூலம் அவர்களுக்கு மாதாந்திர வருமானத்தை அது பெற்றுத் தருகிறது.
பட்டு வளர்ப்பில் ஒரு கிலோ கிராம் கச்சாப்பட்டு உற்பத்தி செய்வதன் மூலம் பட்டுத் தொழில் 11 மனித நாட்கள் வேலை வாய்ப்பினை (பண்ணை மற்றும் பண்ணை சாரா செயல்பாடுகள் மூலம்) ஏற்படுத்தித் தருகிறது. மேலும் ஓர் ஏக்கர் மல்பெரி பயிரிடுவதன் மூலம் பட்டுத் தொழிலில் 5 நபர்களுக்கு ஆண்டு முழுவதும் நேரடி வேலை வாய்ப்பினை ஏற்படுத்தித் தருவதாக கணக்கிடப்பட்டுள்ளது. வேலை வாய்ப்பு ஏற்படுத்தித் தருவதாக கணக்கிடப்பட்ட அளவானது மல்பெரி நடவு செய்யும் நிலையிலிருந்து பட்டு ஜவுளிகள் உற்பத்தி செய்யப்படும் நிலை வரையிலான காலம் ஆகும்.
பட்டு வளர்ப்பு என்பது பட்டுப்புழுவின் உணவான, மல்பெரி, ஆமணக்கு மற்றும் இதர தாவரங்களை சாகுபடி செய்தல், பட்டுப்புழுக்களை வளர்த்தல், பட்டு நூல் உற்பத்தி செய்தல் மற்றும் இதர செயல்பாடுகளை உள்ளடக்கியதாகும்.
‘ஆடைகளின் அரசி’ என்று பட்டு அழைக்கப்படுகிறது. மல்பெரி, ஈரி, டசார் மற்றும் மூகா என நான்கு வகையான பட்டுகள் வர்த்தக ரீதியிலாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. உலகிலேயே நான்கு வகை பட்டுகளையும் உற்பத்தி செய்யும் ஒரே நாடு இந்தியாவாகும். மல்பெரி பட்டுப்புழுக்கள் மல்பெரி இலைகளையும், ஈரி பட்டுப்புழுக்கள் ஆமணக்கு மற்றும் மரவள்ளி இலைகளையும் உணவாக உட்கொள்ளும். டசார் மற்றும் மூகா பட்டுப்புழுக்கள் வன வகையை சார்ந்தவை. அவை இந்தியாவின் வடகிழக்கு மலைப்பகுதிகளில் பரவலாக காணப்படுகிறது. இவற்றுள் மூகா பட்டு மதிப்பு மிக்கதாகும். இது இந்தியாவின் அசாம் மற்றும் அதன் அண்டை மாநிலங்களில் மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது.
உலக பட்டு உற்பத்தியில் சீனாவிற்கு அடுத்து, இந்தியா இரண்டாம் இடம் வகிக்கிறது. மல்பெரி பட்டு உற்பத்தியில் தமிழ்நாடு இந்தியாவில் நான்காம் இடம் வகிக்கிறது. சமீபகாலமாக, ஈரி பட்டுப்புழுக்களை வளர்த்து ஈரி பட்டு உற்பத்தி செய்வது புதுப்பிக்கப்பட்டு வருகிறது.
பட்டுப்புழுக்களின் வாழ்க்கைச் சுழற்சியானது முட்டை, புழு, கூட்டுப்புழு மற்றும் பூச்சி என நான்கு நிலைகளை கொண்டது. ஐந்தாம் பருவத்தில் உள்ள முதிர்ந்த பட்டுப்புழுக்கள் பட்டுக்கூடுகளை பின்னுகின்றன. பட்டுப்புழுக்களின் உமிழ்நீர்ச் சுரப்பிகளிலிருந்து வெளிப்படும் ஃபைப்ராயின் என்ற புரதமும் செரிசின் என்ற பசையும் கலந்து தொடர்ச்சியான இழையாக பட்டு நூல் வெளிவருகிறது. இந்த செரிசின் பசையானது பட்டு இழைகளை நன்றாக பிணைக்கச் செய்கிறது. பட்டுக்கூடுகளை சுடுநீரில் மூழ்க வைக்கும் பொழுது, செரிசின் பசை நீக்கப்பட்டு, பட்டு இழைகள் இலகுவாகி பட்டுநூற்பு எளிதாகிறது. இச்செயல்முறை ‘பசை நீக்கம்’ எனப்படும். பட்டுக்கூடுகளை சுடுநீரில் மூழ்க வைப்பதால், பட்டுக்கூட்டினுள் உள்ள கூட்டுப்புழுக்கள் இறந்து விடுகின்றது. பட்டுநூற்பு இயந்திரம் மூலம் பட்டுக்கூட்டில் இருந்து பட்டு நூல் பிரித்தெடுக்கப்படுகிறது. இவை பின்னர் உலர்த்தப்பட்டு அடுத்த நிலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
சேலைகள், வேட்டிகள், ஆடைத் துணிகள், கழுத்து / தோளணித் துண்டுகள், ஆயத்த ஆடைகள், படுக்கை விரிப்புகள், தரை விரிப்புகள், அறை அலங்காரத் துணிகள் போன்ற பல்வேறு பட்டுத் துணி வகைகள் பட்டு நூலைப் பயன்படுத்தி உற்பத்தி செய்யப்படுகின்றன. பட்டு நூலை மற்ற நூல்களுடன் கலந்து கலப்புத் துணி வகைகளும் உற்பத்தி செய்யப்படுகின்றன
கி.மு. 2700 இல் பட்டு கண்டுபிடிக்கப்பட்டு இருந்தாலும், தொல்லியல் ஆவணங்களில் குறிப்பிட்டுள்ளவாறு பட்டு உற்பத்தியானது கி.மு. 5000 முதல் 3000 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. கி.பி. 140 ஆம் ஆண்டில் ‘பட்டுப்பாதை’ வழியாக பட்டு உற்பத்தி இந்தியாவிற்குள் உருவெடுத்தது. கனிஷ்கர் பேரரசு காலத்தில் இந்தியாவிற்கும் ரோமானிய/ கிரேக்க நாடுகளுக்கும் இடையே மிகவும் செழிப்பான பட்டு வர்த்தகம் இருந்ததாக வரலாற்றுச் சான்றுகள் தெரிவிக்கின்றன. சங்க இலக்கியங்களான கலித்தொகை, பரிபாடல் (எட்டுத்தொகை) மற்றும் திருமுருகாற்றுப்படை (பத்துப்பாட்டு) ஆகியவற்றின் மூலம் பண்டைக் காலத்தில் தமிழ்நாட்டில் பட்டு ஆடைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதை அறியமுடிகிறது.
தமிழ்நாட்டில் புவிசார்க் குறியீடுகள் வழங்கப்பெற்றுள்ள 7 வகை ஜவுளிகளில், 4 வகைகள் பட்டுத்துணிகளாகும். அவை காஞ்சிபுரம், ஆரணி, திருபுவனம் பட்டு சேலைகள் மற்றும் சேலம் வெண்பட்டு வேட்டிகள் ஆகும்.